எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 21-ம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான 4-ம் நாள் கலந்தாய்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
கலந்தாய்வில் பங்கேற்குமாறு 653 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 608 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். 45 மாணவர்கள் பங்கேற்கவில்லை. தகுதியான 253 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 13 மாணவர்களுக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
பொதுப் பிரிவுக்கான 4-ம் நாள் கலந்தாய்வு முடிவில் தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 354 எம்பிபிஎஸ் இடங்கள், 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 136 எம்பிபிஎஸ் இடங்கள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 13 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 23 பிடிஎஸ் இடங்கள் மீதம் உள்ளன. இன்று நடைபெறும் கடைசி நாள் கலந்தாய்வுக்கு 534 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.