புதுவையில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 4 நாட்கள் நடக்கும் சர்வதேச யோகா திருவிழா சனிக்கிழமை இரவு தொடங்கியது. புதுவை சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா சனிக்கிழமை இரவு தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி திடலில் யோகா திருவிழாவைத் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுவை சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த ஆன்மிக பூமி. சுற்றுலாவில் இந்திய அளவில் 3-வது இடத்தில் புதுச்சேரி உள்ளது. புதுவைக்கு சுற்றுலா வருவோர் குறைந்தபட்சம் 3 நாட்கள் வரை தங்கி பொழுதுபோக்கும் வகையில் சுற்றுலா மேம்படுத்தப்படும் என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, யோகா திருவிழா தொடர்பாக கூறுகையில், “ஆன்மிக சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் 20-வது ஆண்டாக உலக யோகா திருவிழா நடத்தப்படுகிறது. வரும் 7-ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர், கனடா, அமெரிக்கா, சைப்ரஸ், கொரியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்றுள்ளனர். இதற்காக புதுவை மாநில சுற்றுலாத் துறை ரூ.50 லட்சம் ஒதுக்கி உள்ளது” என்றார் ராஜவேலு.
கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரிய நமஸ்கார நிகழ்வு நடைபெற்றது. இதில் 500 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.