தமிழகம்

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை: 3 மாணவர்கள் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, கீழவல்லநாடு பகுதியில் இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், அவரது கல்லூரி மாணவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் சமுதாயத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிமிடங்களில் நடந்த கொடூரம்

திருநெல்வேலி சுரண்டை அருகே சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (53). இவருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். சுரேஷ் நேற்று காலை 8.30 மணிக்கு தனது காரில் கல்லூரிக்கு வந்து இறங்கினார். அப்போது அங்கு காத்திருந்த மூன்று மாணவர்கள், சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இந்த வன்முறைக் காட்சிகளைக் கண்டு மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். ஆனாலும் சில ஊழியர்களும் மாணவர்களும் மூன்று பேரையும் வளைத்துப் பிடித்து, முறப்பநாடு போலீஸில் ஒப்படைத்தனர். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் என்ன?

மாணவர்கள் பிச்சைக்கண்ணு , டேனிஸ், பிரபாகரன் ஆகியோர் இந்தக் கொலையை செய்தது தெரிந்துள்ளது. பிச்சைக்கண்ணு நாசரேத் அருகே வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்தவர். ஏரோநாட்டிக்கல் படிக்கிறார். டேனிஸ் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்தவர். பி.டெக். தகவல் தொழில்நுட்பம் படிக்கிறார். பிரபாகரன் நாகப்பட்டினம் கீழமேலூரை மீளப்பாடியைச் சேர்ந்தவர். சிவில் படிக்கிறார்.

மூவரும் பாளையங்கோட்டையில் ஒரு வீட்டில் தங்கியிருந்து பேருந்தில் கல்லூரிக்கு வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் வந்த பேருந்தில் மாணவர்கள் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கல்லூரிக்குள்ளும் எதிரொலித்தது. இதையடுத்து முதல்வர் சுரேஷ், மாணவர் பிச்சைக்கண்ணுவை சஸ்பெண்ட் செய்தார். இதில் ஆத்திரமடைந்த மூவரும் இந்தக் கொலையை செய்திருக்கிறார்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எஸ்.பி. துரை இதுகுறித்து கூறுகையில், ‘‘கல்லூரி நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகிறது. அதுதொடர்பாக இருதரப்பிலும் விசாரித்து வருகிறோம்.” என்றார். கல்லூரியின் இயக்குநர் ஆனந்த், ‘‘எங்கள் கல்லூரியில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கென்றே ஆலோசனை மையம் இருக்கிறது. ஆனாலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முதல்வர் சுரேஷ் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர்” என்றார். வரும் 17-ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர் சர்ச்சையில் கல்லூரி!

சர்ச்சைகள் ஒன்றும் இக்கல்லூரிக்கு புதிது இல்லை என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் உச்சிமாகாளி. ‘‘இக்கல்லூரியின் தாளாளர் நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டீபன். அவரது மகன்கள் ஆனந்த், ஆல்வின் இயக்குநர்கள். 2008-ம் ஆண்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ஆறு மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து மொத்த மாணவர்களும் இரு மாதங்கள் போராட்டம் செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்தது.

2012-ம் ஆண்டு மாணவர்கள் சிலர், கல்லூரி நிர்வாகிகள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக முறப்பநாடு போலீஸில் புகார் செய்தனர். பதிலுக்கு தங்களை மாணவர்கள் தாக்கியதாக நிர்வாகிகள் புகார் செய்தனர். அப்போதும் போராட்டம் வெடித்தது. தூத்துக்குடி கோட்டாட்சியர் தலையிட்டு சமரசம் செய்தார். 2011- 2012-ல் போதுமான வருகைப் பதிவேடு இல்லை என்று நிர்வாகம் 70 மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் செய்தது. அப்போதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.” என்றார்.

மாணவர்களின் ரவுடி அவதாரம்

தென் மாவட்டங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே மோதல்கள் சகஜமாகிவிட்டன. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மாணவர் பேரவை தேர்தல்களில் மோதல்கள் கலவரங்களாக வெடிக்கின்றன. இக்கல்லூரிகளில் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படிக்கிறார்கள். கேரளத்தில் இருந்து மாணவர்களை இங்கு அழைத்து வருவதற்கு ஏஜெண்டுகளை கல்லூரிகள் நியமித்துள்ளன. அப்படி வரும் கேரள மாணவர்கள் பலர் ஆடம்பரமாக இருக்கின்றனர். லட்சங்கள் மதிப்பிலான பைக்குகளை ஓட்டி வருகிறார்கள். ராகிங், காதல், விடுதிகளில் நடக்கும் மது விருந்துகள் தொடர்பான மோதல்கள் அடிக்கடி வெடிக்கின்றன. குறிப்பாக தமிழக, கேரள மாணவர்கள் இடையே மோதல்கள் அதிகம்.

சில மாதங்களுக்குமுன் திருநெல்வேலி, மேலதிடியூரில் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் கலவரம் வெடித்தது. ஒரு கோடி மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தன. கல்லூரி தலைவரின் கார் நொறுக்கப்பட்டது. மாணவர்கள் பலர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகின.

தேவை உளவியல் ஆலோசனை மையங்கள்!

இதுபோன்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசு கலைக் கல்லூரிகளின் ஆசிரியர் கழக மாநிலத் தலைவரும் கல்வியாளருமான பேராசிரியர் தமிழ்மணி முன்வைத்தார். ‘‘சென்னை மாநிலக் கல்லூரி, கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஜி. கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கியக் கல்லூரிகளின் உளவியல் துறைகள் மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே ஆலோசனை மையங்களை நடத்தி வருகின்றன. உளவியல் துறையின் பேராசிரியர்கள் பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளியெறிய சம்பந்தப்பட்ட மாணவர்களை, ஆசிரியர்களை, பெற்றோரை அழைத்து பேசி உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை அளிக்கின்றன. மேலும் எவை எவற்றில் எல்லாம் பிரச்சினையின் காரணிகள் இருக்கின்றன என்பதை இம்மையங்கள் முன்கூட்டியே கண்டறிந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதனாலேயே பெரும்பான்மை பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

அடுத்து ஆசிரியர். நாள் ஒன்றுக்கு ஒரு மாணவர் ஐந்து மணி நேரம் வகுப்பறையில் கழிக்கிறார். இதன் மூலம் ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் 40 நிமிடங்கள் வரை செலவிடுகிறார். இந்த நிமிடங்கள் கல்விக்கானது மட்டும் அல்ல. அந்த நேரத்தில் பாடத்துடன் சேர்த்து வாழ்வியல் நேர்மறை நன்னெறிகள், எதிர்கால வேலைவாய்ப்பு, வெளியுலகம் குறித்த புரிதல்களைக் கற்றுத்தர வேண்டும். மேலும், மாணவரின் பொருளாதார, குடும்ப சூழ்நிலைகளையும் அறிந்து அதில் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கும் ஓர் ஆசிரியர் ஆலோசனை அளிக்க வேண்டும்.

அடுத்து பெற்றோர். குழந்தைகளிடம் மிகுந்த கண்டிப்பு, மிகுந்த சுதந்திரம் இரண்டுமே தவறானவை. கண்காணிப்பும், கண்டிப்பும் தேவை; ஆனால், எல்லை தாண்டினால் அதுவே குழந்தைகளை தவறான பாதைக்கு கொண்டுச்செல்லும். குறிப்பாக, பெற்றோர் கல்லூரிக்கு தங்கள் குழந்தையை அனுப்பியதுடன் கடமை முடிந்ததாகக் கருதாமல் அடிக்கடி ஆசிரியர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெற வேண்டும்.

அடுத்து கல்லூரி நிர்வாகங்கள், பணம் மட்டுமே குறியாக செயல்படாமல், சிறு தவறுக்கு எல்லாம் பெரிய அபராதம், டிஸ்மிஸ் என்று நடவடிக்கை எடுக்காமல் ஆசான்களின் ஆசான்களாக கல்லூரி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT