முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் உண்மை நிலையை விளக்க மூத்த பொறியாளர்கள் உதவியுடன் தென் மாவட்ட விவசாயிகள் 2-ம் பாகம் குறும்படம் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர்.
கடந்த மாதம் 7-ம் தேதி பெரியாறு அணை நீர்மட்டம் 2-வது முறையாக 142 அடியை எட்டியது. அப்போது அணை பலமிழந்துள்ளதாகவும், இதனால் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட அனுமதிக்கக் கோரி, இரண்டு வாரங்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்தித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசினார்.
இதற்கிடையில் கேரள அமைச்சர் அடூர்பிரகாஷ் தலைமையில் கட்சியினர் அணைப் பகுதிற்குள் அத்துமீறி நுழைந்து, பல்வேறு தகவல்களை சேகரித்து சென்றனர். பின்னர், வழக்கம்போல அணை பலமிழந்துள்ளதாகவும், 136 அடியாக நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, மூவர்குழு மற்றும் மத்திய துணைக்குழுவில் உள்ள கேரள பிரதிநிதிகளான குரியன், ஜார்ஜ் டேனியல், பிரசீத் ஆகியோர் மூலம் ஆய்வுக் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தென்மாவட்ட விவசாயிகள் அணையின் உறுதித்தன்மை மற்றும் உண்மை நிலையை விளக்க குறும்படம் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பெரியாறு, வைகை பாசன ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸ், பதினெட்டாம் கால்வாய் திட்ட விவசாய சங்கச் செயலாளர் திருப்பதிவாசன் ஆகியோர் கூறுகையில், பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித் துறை ஓய்வுபெற்ற மூத்த பொறியாளர் சங்கம் சார்பில், 2004-ம் ஆண்டு 45 நிமிடம் ஓடக்கூடிய குறும்படம் தயாரித்து வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து இரு மாநில மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், அணையின் உண்மை நிலை பாகம்-2 என்ற பெயரில் 20 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தினை மூத்த பொறியாளர்கள் உதவியுடன் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இந்தப் படத்தில் ஐவர் குழு அறிக்கை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உத்தரவு, மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த சுருக்கம், நாதன் தலைமையிலான மூவர் குழு அறிக்கை, 142அடியாக நீர்மட்டம் உயர்த்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் அணையில் பாதிப்பு ஏற்படாதது, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பொதுப்பணித் துறையினரை கேரள வனத்துறை தடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற உள்ளன. குறும்பட பணி முடிந்ததும் சிடி, டிவிடியில் பதிவு செய்து தமிழகம், இடுக்கி மாவட்டத்தில் இலவசமாக விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.