தமிழகம்

சிந்துவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு வெள்ளிப் பதக்கம்: வாசன் வாழ்த்து

செய்திப்பிரிவு

ரியோ - 2016 ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து கலந்து கொண்டு விளையாடி, அறை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டி வரை சென்றது தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருப்பது அவரது திறமைக்கும், தொடர் முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த பரிசு. இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது.

பி.வி.சிந்துவின் அரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோர்களுக்கும், அவரது பயிற்சியாளருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். மேலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

பள்ளிப் பருவம் முதல் அனைத்து கல்விக் கூடங்களிலும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகளை கண்டறிந்து, அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டிய திட்டங்களை செயல்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகின்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பல்வேறு சலுகைகள், விருதுகள், உதவிகள் வழங்கிட அரசு முன்வர வேண்டும். குறிப்பாக விளையாட்டுத் துறையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அதன் அடிப்படையில் விளையாட்டுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் குறிப்பாக அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் விளையாடும் இடம், உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு இட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, விளையாட்டினை ஊக்கப்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இனி வரும் காலங்களில் நம் நாட்டில் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களை உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமல்லாமல் உலக அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ளச் செய்து நம் நாட்டின் பெருமையையும், புகழையும் நிலைநாட்ட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT