ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற்றதையடுத்து கடந்த ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைப்போல ஜெயலலி தாவின் வெற்றியை எதிர்த்து சேலம் மாவட்டம் முல்லை வாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சுரேஷ் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி கடந்த 2015 ஜூன் 8-ம் தேதி மனு தாக்கல் செய்தேன். ஆனால் என்னை முன்மொ ழிந்த 10 பேரில், விக்னேஷ் என்பவருக்கு வாக்குரிமை இல்லை எனக்கூறி எனது வேட்புமனு தவறுதலாக நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த தேர்தலில் போட்டியிட முடியவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது சட்டவிரோதம். எனவே அந்த தேர்தலை ரத்து செய்து, முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா முன்பு நடந்தது. தமிழக முதல்வர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதி பதி நேற்று பிறப்பித்த உத்தர வில், ‘‘வழக்கறிஞர் டி.சுரேஷ் தாக்கல் செய்த வேட்புமனு வில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், அதன் காரண மாகவே அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.