சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மக்கள் வந்து செல்ல வசதியாக வால்டாக்ஸ் சாலையில் மற்றொரு நுழைவாயில் அடுத்த 3 மாதங்களில் திறக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய அடையாளமாக மட்டுமல்லாமல், தென் மாநிலங்களில் முக்கிய ரயில் போக்குவரத்து முனையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இருந்து வருகிறது. தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை வழங்கப்பட்டு வரு கிறது.
இதுதவிர, சென்னை புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், வாடகைக் கார்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் மற்றொரு நுழைவாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் வருகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே இருக்கும் நுழைவாயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து செல்வதற்கு வசதியாக வால்டாக்ஸ் சாலையில் மற்றொரு நுழைவாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த 3 அல்லது 6 மாதங்களில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு நுழைவாயில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.