அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு 2017-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை-அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் சிறந்த பெண்களில் ஒருவரை தேர்வுசெய்து அவருக்கு தமிழக அரசு சார்பில் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது, ஒரு லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்கப்பதக்கம், பாராட்டுச்சான்றிதழ், பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது. கடந்த 2012 முதல் மகளிர் தினத்தையொட்டி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குத் தொண்டாற்றி வரும் அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமன் 2017-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார். அவருக்கு அவ்வையார் விருதையும் ரூ.1 லட்சம் காசோலையையும், தங்கப்பதக்கத்தையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்றுக்கொண்ட பத்மா வெங்கட்ராமன், தனது சேவையை அங்கீகரித்து விருது வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.