காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகம் கோரும் 26 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்புக் குழுவின் குழு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நீர்வளத் துறை அமைச்சகச் செயலர் அலோக் ராவத் தலைமையில், டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காவிரி கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை இன்னும் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், இறுதி தீர்ப்பை அமல்படுத்த காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை கமிட்டி ஆகிய இரு அமைப்புகளை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மூன்றாவது கூட்டம் முடிந்து 4 மாதங்கள் ஆன பின்பும் ஆய்வு செய்யாமல் உள்ள பிரச்சினைகளை ஆய்ந்து தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழகம் சார்பில் கோரப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட காவிரி கண்காணிப்புக் குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான அலோக் ராவத், காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகம் கோரும் 26 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வாய்மொழி உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, எழுத்துப்பூர்வமான உத்தரவு வரும் திங்கள்கிழமை கர்நாடக அரசுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், காவிரி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சுப்பரமணியம், கர்நாடக அரசின் தலைமை செயலாளர் கௌஷிக் முகர்ஜி, கேரள பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.