டி.பி.சத்திரத்தில் மளிகை கடைக்குள் புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அமைந்தகரை அருகே செனாய் நகர் ஜோதி அம்மாள் நகரைச் சேர்ந்தவர் முருகன்(34). இவர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் டி.பி.சத்திரம் பிரதான சாலையில் மளிகை கடை வைத்துள்ள தனது நண்பர் நாராயணன் என்பவருடன் கடைக்குள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதை தடுக்க முயன்ற நாராயணனுக்கும் வெட்டு விழுந்தது. இருவரையும் வெட்டி விட்டு அந்தக் கும்பல் தப்பி சென்றுவிட்டது.
இந்தக் கொலை தொடர்பாக டி.பி.சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி களைப் பிடிக்க தனிப் படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் 2013-ம் ஆண்டு ஜெயராமன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மார்டின், ராஜேஷ், ரோஹித், கோபி, ஆகாஷ் ஆகிய 5 பேர் சிக்கினர். அவர்களை நேற்று போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.