எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான நீட் தேர்வு நாளை நடைபெறு கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் மொத்தம் 2,200 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 11.35 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் அரசு, தனி யார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET - நீட்) மூலம் நிரப்பப்படுகின்றன.
மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க் கைக்கான நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயி ரத்து 104 பேர் விண்ணப்பித்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 41.42 சதவீதம் அதிகம்.
அவகாசம் நீட்டிப்பு
இதற்கிடையில், 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வயது உச்ச வரம்பை நீக்கிய உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற் கான அவகாசத்தை ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டித்து உத்தர விட்டது.
சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) கடந்த ஏப்ரல் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. பதிவெண், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை மாணவர் கள் பதிவிறக்கம் செய்துகொண் டனர்.
10 மொழிகளில் தேர்வு
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் மொத்தம் 2,200 மையங்களில் நீட் தேர்வு 7-ம் தேதி (நாளை) நடக்கிறது. சென்னையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கிறது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாமி, பெங்காலி ஆகிய 10 மொழிகளில் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பகல் 1 மணி வரை நடக்கும். தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும்.
புகைப்படம் மாறியுள்ளதா?
தனியார் இணைய மையங்கள் மூலம் விண்ணப்பித்த சில மாணவர் களின் தவறான புகைப்படம், கையெ ழுத்து பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்த ஊழியர் களின் கவனக்குறைவால் இத்தவறு நடந்துள்ளது. இதனால், அந்த மாணவர்களின் ஹால்டிக்கெட் களிலும் தவறான புகைப்படம், கையெழுத்து இடம்பெற்றுள்ளன. அத்தகைய மாணவர்கள் அசல் ஆதார் அட்டை அல்லது புகைப் படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டைகளை தேர்வுக்கு தவறாமல் எடுத்துவர வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
விலக்கு கிடைக்கவில்லை
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கோரும் சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் பிப்ரவரி 1-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்தும், கடிதங்கள் மூலமாகவும் வலியுறுத்தினார்.
பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர் களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் பொதுவாக நடத்தப்படும் தேர்வில் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறை கூறிவருகிறது.