தமிழகம்

சென்னையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: கூட்டுத் தொழுகையில் புத்தாடை அணிந்து முஸ்லிம்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புனித பண்டிகையான ரம்ஜான் நேற்று உற்சாகமாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி சென்னை யில் நடைபெற்ற கூட்டுத் தொழுகை யில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர்.

ரம்ஜான் பண்டிகைக்கான முதல் பிறை ஞாயிற்றுக்கிழமை தெரிந்ததால் திங்கள்கிழமை தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. சென்னை தீவுத்திடலில் நடை பெற்ற சிறப்பு கூட்டுத் தொழுகை யில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிவடைந்ததும் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பிராட்வேயில் உள்ள டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை நடத்தினர். தொழுகை முடிவடைந்த தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மூத்த தலைவர் பேராசிரியர் எச்.ஜவாஹிருல்லா உரையாற்றினார்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் தலைமையில் சென்னை குடிசை மாற்று வாரியம் எதிரே மெரினா கடற்கரையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், மாநில அமைப்புச் செயலாளர் முகமது இஸ்மாயில், இளைஞர் அணி தலைவர் எஸ்.முஸ்தபா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவல்லிக்கேணியில் நடை பெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை யில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி பங்கேற்றார். அவர் தனது ரம்ஜான் வாழ்த்துரை யில், நாட்டு மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடனும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண் டார். ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடந்த தொழுகையில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் புத்தாடை அணிந்து உற்சாகமாக கலந்துகொண்டனர்.

மேலும், திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், மண்ணடி ஈத்கா உட்பட பல்வேறு இடங்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று கூட்டுத் தொழுகை நடை பெற்றது. தொழுகை முடிந்த பிறகு, பள்ளி வாசல்கள் முன்பு கூடியிருந்த ஏழைகளுக்கு முஸ்லிம்கள் புத்தாடை, உணவு வழங்கினர். ஒரு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி முஸ்லிம்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தனர். ரம்ஜான் தொழுகை நடைபெற்ற அனைத்து இடங் களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT