புறநகர் மின்சார ரயில்களில் சீசன் டிக்கெட் பாஸை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் கடைபிடிக்கும் முறை சிரமத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள காலத்தில் இணையதளம் வழியாகவே சீசன் பாஸை புதுப்பிக்க வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்தைவிட, ரயில்களில் கட்டணம் மற்றும் பயண நேரம் குறைவு என்பதால் சென்னை புறநகர் பயணிகள் மின்சார ரயில்களை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் பயணிகள் மாதம் ஒரு முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை என சீசன் பாஸ்களை புதுப்பித்துக் கொள்கின்றனர். சீசன் பாஸை புதுப்பிக்க குறைந்தது 3 நிமிடங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. விண்ணப்பப் படிவம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து நகல் எடுத்துக்கொண்டு, அசல் விண்ணப்பப் படிவத்தை திரும்ப டிக்கெட் கவுன்டரில் வழங்குமாறு டிக்கெட் வழங்கும் ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இது குறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த பயணி ஒருவர் கூறியதாவது: ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குவது சிரமமாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட ரயிலை பிடிக்க முடியாமல் போகிறது. பணி முடிந்து இரவில் திரும்பி வரும்போது, புதுப்பிப்பதற்கான நேரம் முடிந்துவிடுகிறது. அதனால் சீசன் பாஸ் புதுப்பிக்கும் சேவையை ஆன்லைனில் வழங்க வேண்டும் என்றார்.
இது குறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் விவரங்களை பெற்று, பதிவு செய்து சீசன் பாஸை புதுப்பிக்கும் முறையை ரயில்வே நிர்வாகம் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அந்த விவரங்களை ஆன்லைனில் வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட பயணி, நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் புதுப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பயணியே ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ரயில்வே, தொழில்நுட்பரீதியில் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது.
தற்போது ஐஆர்சிடிசி மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு சேவை நடைமுறையில் உள்ளது. விரைவில் ஐஆர்சிடிசி மூலம் சீசன் பாஸ் புதுப்பிக்கும் சேவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.