தமிழகம்

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு: நட்ராஜ் விளக்கம்

செய்திப்பிரிவு

மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை. அந்த அடிப்படையில் எனது ஆதரவு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்குதான் எனத் தெரிவித்துள்ளார் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ்.

அதிமுகவில் விரிசல் ஏற்பட்டவுடன் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் கட்சித்தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டனர். கடந்த 8-ம் தேதி முதல் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தாலும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் அங்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நட்ராஜ் ஆதரவு ஓபிஎஸ். அணிக்கு என்பதுபோல் செய்திகள் வெளியாகின. அது தொடர்பாக தனது முகநூலில் கருத்து தெரிவித்திருந்த நட்ராஜ், "அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நல்ல ஒரு தீர்வு ஏற்பட ஓரணியாக திரள முயற்சி எடுத்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டு முகநூலில் ஒரு நிலைத்தகவல் பதிந்திருந்தார்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அவர், தனது ஆதரவை ஓபிஎஸ் அணிக்கு தெரிவித்துள்ளார். "மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதே எனது கடமை. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை. அந்த அடிப்படையில் எனது ஆதரவு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்குதான். இதை எதிரொலிக்கும் வகையில்தான் சட்டப்பேரவை வாக்கெடுப்பில் எனது வாக்கை செலுத்துவேன்" என்று கூறியுள்ளார்.

நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கும் நிலையில் எம்.எல்.ஏ ஒருவரின் இந்த திடீர் முடிவு பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியிருக்கிறது.

SCROLL FOR NEXT