தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் தீவிரமாகும் போராட்டங்கள்: மாணவர்கள், இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகையின்போது தொடங்கி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். உச்ச நீதிமன்ற தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தத் தடை நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காட்சிப்படுத்த தடை விதிக்கப் பட்ட விலங்குகள் பட்டியலில் காளை கள் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியவில்லை. எனவே, இந்தப் பட்டியலில் காளையை நீக்கி மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், திரைப்படத் துறையினர் போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

சென்னை, மதுரை, கோவை என தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள், மாவட்டத் தலைநகரங் களிலும் உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம், மத்திய அரசு அலுவல கங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மாணவர்கள், இளைஞர்கள், திரைத் துறையினர் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுடன் இணைந்து கோஷ மிட்டார். அப்போது பேசிய ஸ்டாலின், ‘‘ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல மிகப்பெரிய அளவில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வெடிக் கும்’’ என எச்சரித்தார்.

சென்னையில் உண்ணாவிரதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். உண்ணாவிரதத்தில் பேசிய கரு.பழனிப்பன், ‘‘தமிழகத்தின் தனித்த அடையாளம் என்பதால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது” என குற்றம்சாட்டினார்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் பங்கேற்றார். அப்போது பேசிய சீமான், ‘‘தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவேன்; முடிந்தால் என்னை கைது செய்து கொள்ளுங்கள்’’ என்றார்.

பாஜக அலுவலகம் முற்றுகை

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வல மாக வந்த சுமார் 25 பேரை ம.பொ.சி. சிலை அருகே காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் சாணத்தை கரைத்து குளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அவர் களை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரை தமுக்கம் மைதானம் முதல் ரேஸ்கோர்ஸ் சாலை வரை நேற்று பேரணி நடை பெற்றது. அதில் பல்லாயிரக்கணக் கான கல்லூரி மாணவ - மாணவி கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை தடை செய்ய வலி யுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர், சோழ வந்தான், அலங்காநல்லூர், அவனி யாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, சாலை மறியல் என பல் வேறு போராட்டங்கள் நடைபெற் றன. இதில் பங்கேற்ற நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.

நெல்லையில் போராட்டம்

பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊட கங்களில் விடுக்கப்பட்ட வேண்டு கோளை ஏற்று இந்தப் ஆர்பாட் டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேலூரில் ஆதரவு குரல்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷ மிட்டனர். அதில் பலர் காளை களுடன் பங்கேற்றனர். வேலூரில் ஜல்லிக்கட்டு நடத்த இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தடையை மீறி பேரணி

புதுக்கோட்டையில் தடையை மீறி நூற்றுக்கணககான காளைகளுடன் இளைஞர்கள் பேரணி நடத்தினர். முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுவதால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிர மடைந்துள்ளன.

புதுக்கோட்டையில் நேற்று பேரணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் செம்பனார் கோவிலில் கலைமகள் கல்லூரியில் பயிலும் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களும், பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் மீன் மார்க் கெட் அருகே அனைத்து மாணவர் கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இணையதள நண்பர்கள், கும்பகோணம் நண்பர் கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவையில் பேரணி

கோவை அவிநாசி சாலையில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள், தொழிலாளர் கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு, அங்கிருந்து கொடிசியா மைதானத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். இதில், ஜல்லிக்கட்டு காளைகள், ரேக்ளா வண்டிகள் இடம்பெற்றன.

கோவையில் நடைபெற்ற பேரணியில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். படம்: ஜெ.மனோகரன்

திமுக இன்று ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. பல் வேறு அமைப்புகளும், மாணவர் களும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு: நாம் தமிழர் கட்சியினர் 26 பேர் கைது

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த 4 ஜல்லிக்கட்டு காளைகளை மைதானத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் ஒவ்வொரு காளையாக மைதானத்தில் களமிறக்கப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். காளைகள் அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடின. ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தப் போட்டியை திருவந்திபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் அங்கிருந்த 4 காளைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு, கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் ரவி, திருவாரூர் மாவட்டப் பொருளாளர் பாலாஜி, கடலூர் நகரச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.

சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கிவிட்டு, திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து காளைகளை கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

கடலூர் அருகே திருவந்திபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு.

தமிழ் தேசிய பேரியக்கம் அழைப்பு

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை: தமிழர்களுக்கான உரிமையை, நீதியை பிரதமர் மோடியின் முகம் பார்த்து முடிவு செய்யும் நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ளது. எனவே, தமிழர் மரபு விழாவான ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்ச நீதிமன்றம், பொங்கல் விழாவையொட்டி அவசரத் தீர்வு தரும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் இனியும் காலம் கடத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும்.

SCROLL FOR NEXT