2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்து 100 நாள் நிறைவடைந்ததற்கு சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''எம்.ஜி.ஆரின் வரலாற்றுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரே கட்சி 2-வது முறையாக ஆட்சி அமைப்பது என்பது தற்போதுதான். அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்த பெருமையை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவையே சாரும்.
மக்கள் பணியே அறப்பணி என்ற நோக்கில் அல்லும் பகலும் முதல்வர் செயல்பட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்த பலத் திட்டங்களை மிஞ்சுகிற அளவுக்கு நாளுக்கு நாள் புதிய புதியத் திட்டங்களை வேகமாக முதல்வர் அறிவித்து வருகிறார்.
சிறு,குறு விவசாய கடன் தள்ளுபடி, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், 500 டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் நேரக்குறைப்பு , தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியது உள்ளிட்ட சாதனைகளை 100 நாட்களுக்குள்ளாகவே அதிமுக அரசு செய்து முடித்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.