பிரதமர் மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பருவமழை பொய்த்தது, காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாதது, வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஓராண்டில் 400-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அய்யாக்கண்ணு தலைமையில் எந்தக் கட்சியையும் சாராத நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்த 15 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகளை அவர்கள் எடுத்து வந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு ரூ.39 ஆயிரத்து 565 கோடி நிதி கோரியது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மத்திய அரசு ரூ.1,658 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. வேளாண்மைக்கான இடுபொருள் வழங்க மட்டுமே இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தாங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்துக்கு கூடுதல் நிதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் இணைப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். எனவே, தாங்கள் நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் நன்றி பாராட்டுவார்கள்.