தமிழகம்

ஆய்வறிக்கைகள் மட்டும் போதாது, தீர்வுகளும் சொல்லப்பட வேண்டும் - மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் அறிவுரை

செய்திப்பிரிவு

நாட்டை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி ஆய்வறிக்கைகளை தயார் செய்யும் நிறுவனங்கள், அது குறித்து பல தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை யும் சொல்ல வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுநரும், பிரதமரின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன் கேட்டுக் கொண்டார்.

இந்து மையம்

சென்னையில் உள்ள 'தி இந்து' அரசியல் மற்றும் கொள்கைகளுக்கான ஆய்வு மையத்தை அவர் வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அங்கு நடந்த கலந்துரையாடலின்போது அவர் கூறியதாவது:

இந்த மையத்தில் பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினை களை நன்கு அறிந்துணர்ந்த, அறிவார்ந்த நபர்கள் உள்ளனர். இது போன்றவர்கள் தரும் அறிக்கைகள் ஓர் அரசுக்கு எப்படி பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

நோயும் சிகிச்சையும்

நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அலசி, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் அறிஞர்கள், அதற்கான தீர்வுகளையும் சொல்ல முன்வர வேண்டும்.

உதாரணத்துக்கு, வன்முறையை மாணவர்கள் அதிக அளவில் கையில் எடுத்து வரும் போக்கு பற்றியோ, சமீபத்தில் ஏற்பட்ட முசாபர்பூர் கலவரம் போன்ற பிரச்சினைகளைப் பற்றியோ ஆய்வு செய்யும்போது, பிரச்சினைகளை சொல்லிவிட்டு, அறிக்கையின் இறுதிப் பகுதியில் அதற்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் குறிப்பிட வேண்டும். நோயை மட்டும் விளக்காமல் அதற்கான சிகிச்சை முறையையும் சொல்ல வேண்டும்.

அவ்வாறு செய்தால், முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு (அரசு) உதவிகரமாக இருக்கும். இல்லை யெனில், பத்தோடு பதினொன்று என்பது போல் அந்த அறிக்கை ஆகிவிடும். அரசாங்கம், உங்களைப் போன்றவர்களிடமிருந்து பிரச்சினை களுக்கான தீர்வைத்தான் எதிர்பார்க்கிறது. ஒரு மதக்கலவரம் குறித்த அறிக்கையை தயாரித்தீர்களேயானால், அடுத்து அதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்தும் சொல்ல வேண்டும்.

சாதக பாதகம்

ஓர் ஆய்வறிக்கையை தயாரித்த பிறகு, நாட்டில் பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரி களையோ அல்லது மோசமான நேர்வுகளை எதிர்கொண்ட அதிகாரி களையோ அழைத்து, அந்த அறிக்கையின் சாதக, பாதக அம்சங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். அதன் பிறகு, பிரச்சினை களுக்கான தீர்வுகளையும் சொல்ல வேண்டும். ஆனால், அந்த முடிவுகள் அரசின் விதிகளை மாற்றி எழுதச் சொல்லும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்றார்.

“இந்த மையம், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி, தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு ஆய்வுகளை தயாரித்தும், பல்வேறு தலைப்புகளில் விவாதங்களையும் நடத்தி வருகிறது” என்று 'தி இந்து' மையத்தின் இயக்குனர் மாலினி பார்த்தசாரதி கூறினார்.

முன்னதாக, 'தி இந்து' குழுமத் தின் நிர்வாகக்குழு உறுப்பினர் என்.ராம் வரவேற்றார். கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் என்.முரளி, 'தி இந்து' தமிழ் நாளிதழின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT