தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டி.ஆர்.பாலு உருவபொம்மையை எரித்து, தற்போதைய மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை தொகுதிக்கு டி.ஆர்.பாலுவை திங்கள்கிழமை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்த நிலையில் கட்சி அலுவலகத்தில் கூடி, அங்கிருந்த பழநிமாணிக்கத்திடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அவர்களை பழநிமாணிக்கம் சமாதானம் செய்து அனுப்பினார்.
இந்நிலையில் தஞ்சை ஒன்றிய திமுக அவைத்தலைவர் சோமு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை எதிரில் கூடி, டி.ஆர்.பாலுவுக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர்.
அவரது உருவப்படங்களை தாக்கியதுடன், 2 உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழநிமாணிக்கத்தையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த பழநி மாணிக்கத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான சி.நா.மீ.உபயதுல்லா, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனக் கண்டித்தார்.
அப்போது பேசிய சோமு, “எல்லோரும் எளிதாக தொடர்பு கொள்ளக் கூடியவர் பழநிமாணிக்கம். ஆனால், டி.ஆர். பாலு அதிகாரத் தோரணையோடு நடக்கக் கூடியவர். சென்னையில் இருப்பவரை தஞ்சை தொகுதி மக்கள் எப்படி பார்க்க முடியும். பாலுவுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அளிக்கப்படுவதன் காரணம் என்ன? பாலு, வரும்போதே தனது சாதிப் பின்புலத்தோடே வருகிறார்.
இது கட்சிக்கு நல்லதல்ல. திமுக தலைமை பழநிமாணிக்கத்துக்கே இத்தொகுதியை வழங்க வேண்டும்” என்றார்.