தமிழகம்

ஆட்சியைத் தக்கவைக்க டெண்டர்களில் ஊழலுக்கு இடமளிக்கக் கூடாது: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டெண்டர்களில் ஊழலுக்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக அரசு அறிவித்த திட்டங்களில் பல இன்னும் செயல்பாட்டிற்கே வரவில்லையென்றாலும், துவங்கப்பட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் தேங்கி நிற்கின்றன.

பாலங்கள், சாலைகள், குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் என்று அனைத்து வகையான திட்டங்களும் நிதி பற்றாக்குறையால் ஒரு புறமும், ஊழல்களால் இன்னொரு புறமும் திணறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அரசின் திட்டங்களை நிறைவேற்ற விடப்படும் டெண்டர்களில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என்பது அதிமுக ஆட்சியின் மிக முக்கிய முத்திரையாக மாறி விட்டது.

திமுக அரசு இருந்த போது அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 1998ல் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஒப்பந்ததார்களுக்கு டெண்டர்கள் வழங்குவதில் ஒளிவு மறைவின்றி முடிவுகள் எடுக்கப் பட்டன. புதிய தலைமைச் செயலகம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்த டெண்டர் நடைமுறைகளால் விடப்பட்டு நிறைவேற்றப்பட்டதை இந்த நேரத்தில் நினைவு கூர்வது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் டெண்டர்களில் வெளிப்படைத் தன்மை என்பது அதிமுக ஆட்சியில் மருந்துக்குக் கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. டெண்டர் சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஆளுங்கட்சிக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை கொடுப்பதற்கு வளைக்கப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

டெண்டர் படிவங்கள் கூட அமைச்சர்கள் சொல்லும் ஒப்பந்ததாரர்களுக்கோ அல்லது அதிமுகவினர் விரும்புவோருக்கு வழங்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு, பல அரசு அலுவலகங்களிலும் அடிதடி வரை போன நிகழ்வுகள் எல்லாம் செய்திகளாக பத்திரிகைகளில் வெளிவந்தது. டெண்டர்களில் கொடுக்கப்பட வேண்டிய கமிஷன் பற்றியெல்லாம் பிளக்ஸ் போர்டுகள் வைத்தே பொதுப்பணித்துறை பொறியாளர்கள் போராட்டம் நடத்திய நிகழ்வுகள் எல்லாம் அதிமுக ஆட்சியில் அரங்கேறியது.

ஆன்லைனில் டெண்டர்களை விட்டு வெளிப்படைத்தன்மைக்கு வழி வகுக்க வேண்டிய அதிமுக அரசு, இன்றும் 100 சதவீதம் அந்த நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பலவும் இன்னும் ஆன்லைன் டெண்டர் நடைமுறைக்கு வரவில்லை.

இது தவிர ஆளுங்கட்சியினருக்கு டெண்டர்களை கொடுப்பதற்காக டெண்டர்களில் சிண்டிகேட் முறையும் தொடர்கிறது என்ற குற்றச்சாட்டும் அரசு அதிகாரிகள் மத்தியிலேயே பரபரப்பான பேச்சாக இருக்கிறது. இந்த நிலையில் கூவத்தூரில் அடைத்து வைத்து அந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் விசுவாசத்தை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதையை அதிமுக அரசுக்கு டெண்டர்களை விடுவதில் ஒரு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகத் தெரியவில்லை.

ஆன்லைனில் போடப்படும் டெண்டர்களைக் கூட புதுவகையான நிபந்தனைகளை புகுத்தி, புதிய சான்றிதழ் அப்லோட் செய்ய வேண்டும் என்றெல்லாம் காரணம் காட்டி ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தங்களை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஆகவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் ஆன்லைன் டெண்டர்களில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மைக்கு புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ய வேண்டும். அதே போல் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய அனைத்து அரசு அலுவலகங்களிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் ஆன்லைனிலேயே டெண்டர் பெறும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

டெண்டர் விடுவதில் உள்ள சிண்டிக்கேட் முறையை ஒழிக்கவும், ஆன்லைன் டெண்டர்களில் ஆளுங்கட்சி விரும்பும் ஒப்பந்ததாரர் மட்டுமே பணிகளை எடுக்க முடியும் என்ற நிலையையும் மாற்றி, அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பணிகள் வெளிப்படைத் தன்மையுடனும், கமிஷனுக்கும், ஊழலுக்கும் இடமளிக்காத வகையிலும் டெண்டர்கள் கோருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, அதிமுகவின் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ முதல்வர் பதவியை பயன்படுத்தி செயல்படாமல், ஊழலுக்கு இடமில்லாத வகையில் டெண்டர்களை முடிவு செய்து தமிழக அரசின் கஜானாவை காப்பாற்றும் ஒரே நோக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT