தமிழக மீனவர் படுகொலை, நீட் தேர்வு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு இன்று அவர் அனுப்பிய கடிதத்தில், ''இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மருத்துவர் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மார்ச் 9-ம் தேதி தொடங்கும் மாநிலங்களவையின் நிகழ்வுகளை ஒத்திவைத்து விட்டு மிக முக்கியமான இந்த இரு பிரச்சினைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் கிடைக்காத நிலையில் இப்பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கனிமொழி மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.