தமிழகம்

அவதூறு வழக்குகளில் பிடிவாரண்டுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விஜயகாந்த் வரவேற்பு

செய்திப்பிரிவு

அவதூறு வழக்குகளில் பிடிவாரண்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்பு அளிப்பதாக உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க் கட்சிகள் மீது அவதூறு வழக்கு தொடர்வதை முதலல்வர் ஜெயலலிதா அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த நான், ஆளும் கட்சியின் மக்கள் விரோதப் போக்கை சுட்டிக்காட்டி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதால் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதன் விளைவாக தமிழக அரசு என் மீதும், பிரேமலதா விஜயகாந்த் மீதும், தேமுதிக நிர்வாகிகள் மீதும் தமிழகம் முழுவதும் பல்வேறு அவதூறு வழக்குகள் தொடுத்து வருகிறது.

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தேமுதிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், எதிர்க் கட்சிகள் மீது அவதூறு வழக்கு தொடரும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

என் மீதும், பிரேமலதா மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதை, ரத்து செய்யக்கோரி தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு, விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், தற்போது திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக ஜி.எஸ். மணி தனது மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த மனுமீது இன்று நடைபெற்ற விசாரணையின் போது பழிவாங்கும் ஆயுதமாக அவதூறு வழக்கு சட்டப்பிரிவை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், பிடிவாரண்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வரவேற்பு அளிப்பதாக உள்ளது.

அரசின் தவறுகளை விமர்சிப்பது எப்படி அவதூறாகும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கூற்றுக்கு ஏற்ப உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT