தமிழகம்

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

பண்டிகையை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

கிறிஸ்து பிறப்பு விழாவான 'கிறிஸ்துமஸ்' கிறிஸ்தவர்களின் முக்கியமான திருநாள். வீடுகளில் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல் என கடந்த 15 நாட்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடந்தன.

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று அனைத்து தேவாலயங்களிலும் நாள் முழுவதும் விசேஷ பிரார்த்தனைகள், ஆராதனைகள், திருப்பலிகள் நடந்தன. புத்தாடை அணிந்து ஆலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் அல்லாதவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் நேற்று நள்ளிரவு முதலே நண்பர்களிடமும், சொந்தகளிடமும் வாழ்த்து செய்திகள் பகிர ஆரம்பித்துவிட்டனர். மால்கள், திரையரங்குகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கிறிஸ்துமஸுக்காக சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தன. பல இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்கள் காணப்பட்டன. சிறியவர் முதல் பெரியவர் வரை கேக் உண்டு, அருகிலுள்ள தேவாலயங்களுக்குச் சென்று பிரார்தித்து வந்தனர். ஏசு பிரானை போற்றி பாடல்கள் பாடப்பட்டன.

முக்கியமான தேவாலயங்களில் இரவு 11.30 மணிக்கு திருப்பலி தொடங்கி மறுநாள் இரவு வரை தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் திருப்பலிகள் நடத்தப்பட்டன. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து ஆலயங்களின் மணிகள் ஒலித்தன. அப்போது, திருப்பலி நடத்தும் பாதிரியார்கள் இயேசுநாதர் உலகில் அவதரித்தார் என்பதை குறிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை திருப்பலியில் கலந்து கொண்டோருக்கு காண்பித்தார். பின்னர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை அங்கிருந்து எடுத்து வந்து குடிலில் வைத்து குடிலை புனிதம் செய்தனர்.

அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவில் வழிபாடு நடத்தப்பட்டதால் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு ரோந்து பணிகளும் வழக்கத்தைவிட கூடுதலாக செல்ல அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT