புதுச்சேரியில் கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற் றோர், உறவினர்கள் சட்டப் பேரவை அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இப்போராட்டத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி வினோதினி கடந்த வாரம் கல்லூரியின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரி பேராசிரியர்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்த னர். இதைக்கண்டித்து அனைத்து பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி கவர்னரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் தற்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வினோதினியின் தந்தை இளங்கோ, தாய் மகா மற்றும் உறவினர்கள், மாணவர் அமைப்பினர் தலைமை தபால் நிலையம் முன்பு தொடர் உண்ணா விரதப்போராட்டத்தை செவ்வாய்க் கிழமை தொடங்கினர்.
இப்போராட்டத்துக்கு காங் கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் தற்கொலை சம்பவங்கள் வேதனை தருகின்றன. இதில் உண்மை நிலையை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். விசாரணை வெளிப்படையாக நடைபெற கல்லூரி நிர்வாகமும் ஒத்துழைக்க வேண்டும்.
புதுச்சேரியில் மாணவர் சங்கத்தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர் சங்க நிர்வாகிகள் இருப்பது அவசியம் என்றார்.
அதே போல் பா.ஜ.க. மாநில தலைவர் விஸ்வேஸ்வரன், பொதுச் செயலர்ஆர்.வி.சாமிநாதன், துணைத் தலைவர் பரந்தாமன் உள்ளிட்டோரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர்.