தமிழகம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒட்டுமொத்த அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பாஜக வேட்பாளரை ஆதரிப்பார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் இன்று திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஒட்டுமொத்த அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

திருவள்ளுவர் பிறந்த நாள் காலம் காலமாக வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் திருவள்ளுவர் பிறந்த தினத்தை மாற்றினார். தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் நாளுக்கு மாற்றியது போல, திருவள்ளுவர் பிறந்த நாளை மீண்டும் வைகாசி மாத அனுஷம் நட்சத்திர தினத்துக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் இல.கணேசனும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT