திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக, முருங்கை மரங்கள் முற்றிலுமாக கருகி வருகின்றன. இவற்றைக் காப்பாற்ற முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்ட ன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், பழநி, சின்னாளபட்டி, சித்தையன் கோட்டை, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக பரப்பில் செடி முருங்கை, மர முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் முருங்கைக் காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முருங்கை விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் விலை கிடைத்து வந்தது.
இதனால் முருங்கை பயிரிட்ட விவசாயிகளுக்கு நிரந்தரமாக வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில் பருவமழைகள் பொய்த்ததால் விவசாயிகள் பிற பயிர்கள் பயிரிடுவதைக் குறைத் துக்கொண்டனர்.
இருந்தபோதிலும் இருக்கும் முருங்கை மரத்தைக் காப்பாற்ற போராட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. முடிந்தவரை தண்ணீர் இறைத்து முருங்கையை காப்பாற்றி வந்தவர்கள் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக முருங்கை மரங்கள் கருகத் தொடங்கியுள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.
கிணறுகள், ஆழ்துளைக் கிண றுகளிலும் நீர் வறண்ட நிலையில் முருங்கை மரங்களைக் காப்பாற்ற வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மரத்தின் இலைகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிப்பது போல் வெறும் கிளைகள் மட்டுமே உள்ளன. மரத்தில் பச்சையே இல்லாதவகையில் கருகிவிட்டன.
இதுகுறித்து முருங்கை பயிரிட்ட விவசாயிகள் கூறியதாவது:
நடவு செய்திருந்த செடிமுருங்கை, மர முருங்கைகளை காப்பாற்ற முடிந்தவரை போராடிவிட்டோம். இனியும் காப்பாற்ற வழியில்லாத நிலையில் மரங்கள் கருகிவிட்டன. விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட் டுள்ளது என்றார்.