மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மீதான ‘பொடா’ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நிர்வாகிகள் ஈரோடு கணேசமூர்த்தி, புலவர் செவந்தியப் பன் உள்ளிட்ட 9 பேரை க்யூ பிரிவு போலீஸார் ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வைகோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த சீராய்வு கமிட்டி, அவர் மீதான வழக்குக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தீர்ப்பளித்தது. இந்நிலையில், 2004-ம் ஆண்டு ‘பொடா’ சட்டப்பிரிவை திரும்பப் பெறுவதாகவும், எனவே, வைகோ உள்ளிட்டோர் மீதான வழக்கை முடிக்க வேண்டும் என்றும் பூந்தமல்லி பொடா நீதிமன்றத் தில் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அதை நீதி மன்றம் ஏற்காமல் விசாரணையை தொடர்வதாக அறிவித்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தில் வைகோ மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசார ணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ, கணேச மூர்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பூந்தமல்லி நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தர விட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தில் நீதிபதிகள் ராஜேஸ்வரன், மதிவாணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கள் அளித்த தீர்ப்பு வருமாறு:
‘பொடா’ சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட நீதிமன்றமே பொடா வழக்கை வாபஸ் பெற, அந்த சட்டத்திருத்தம் அனுமதி அளிக்கிறது. ஆனால், வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசே தெரிவித்தும் அதை சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. அதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டப்படி நாங்கள் ஏற்க முடியாது. எனவே, வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றனர்.