தமிழகம்

புதுவையில் 24 மணி நேர இலவச வைஃபை வசதி: நாராயணசாமி தகவல்

செய்திப்பிரிவு

ரிலையன்ஸுடன் இணைந்து 24 மணி நேர இலவச வைஃபை வசதியை புதுவை அரசு கல்லூரிகள், கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்த உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் காங்கிரஸ்- திமுக கூட்டணி. 17 இடங்களில் வென்றது. இதனை அடுத்து நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று முதல்வராக பொறுப்பேற்றார்.

கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 100 நாட்கள் இன்று நிறைவடைந்தது. அதையடுத்து புதுச்சேரியில் காந்தி, நேரு, இந்திராகாந்தி உட்பட நகரிலுள்ள பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் டூவீலரில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை வாசித்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

''நிதி ஆதாரத்தை பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியில்லை. அதனால் இடைக்கால நிதி நிவாரணமும் கோரியுள்ளோம். சிறப்பு மாநில அந்தஸ்தை உறுதியாக பெறுவோம். நாட்டிலேயே 7வது ஊதியக்கமிஷனை அமல்படுத்திய முதல் மாநிலம் புதுச்சேரிதான். வணிக விழா விரைவில் நடத்த உள்ளோம். மக்கள் தொடர்ந்து ஆதரவு தந்தால் பல திட்டங்களை நிறைவேற்றுவோம்.

100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 50 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டது இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

புதுச்சேரியில் லெனோவா, ஹெச்சிஎல், கோவையில் இருந்து ஆயுத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் ஐடி பூங்கா ஏற்படுத்தப்படும்.

அனைத்து அரசு கல்லூரிகளிலும் வைபை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ரிலையன்ஸ் மூலம் கடற்கரைச்சாலை, சட்டப்பேரவை, காந்திவீதி, நேரு வீதி ஆகிய பகுதிகளில் 24 மணிநேரமும் வை பை வசதி ஏற்படுத்தி கொடுக்க உள்ளோம்.

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் புதுச்சேரி மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட கழிப்பறைகள் கட்டும் பணியை விரைவுப்படுத்தியுள்ளோம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கினால் அவரை நேரில் சென்று சந்திப்பேன். நான் போட்டியிடும் தொகுதி, குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநில தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முடிவு செய்து அறிவிப்பர்'' என்று நாராயணசாமி கூறினார்.

SCROLL FOR NEXT