சென்னையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மகனின் சொகுசு கார் மோதியதில் திருத்தணி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். ஏற்கெனவே தாயையும் பறிகொடுத்திருந்த நிலையில் 7 வயது சிறுமி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மயிஷா (7), ரஞ்சனா (5) என்ற மகள்கள். கடந்த மே மாதம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி புஷ்பாவும் இளைய மகள் ரஞ்சனாவும் உயிரிழந்தனர். இதனால் மயிஷா தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார்.
இந்நிலையில் போதிய வருமானம் இல்லாததால் சென்னையில் ஆட்டோ ஓட்டி ஆறுமுகம் சம்பாதித்து வந்தார். பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு அதிலேயே படுத்துறங்குவது வழக்கம். அதேபோல் 2 தினங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஆறுமுகமும் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு படுத்துள்ளார்.
அப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஜய்ஆனந்த் என்பவரின் மகன் விகாஸ் தனது நண்பருடன் மதுபோதையில் கார் ஓட்டி வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 ஆட்டோக்கள் மீதும் பயங்கரமாக மோதினார். நேற்று முன்தினம் அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகம் பின்னர் உயிரிழந்தார்.
இதனால் ஏற்கெனவே தாயைப் பறிகொடுத்திருந்த நிலையில் 7 வயது சிறுமி மயிஷா தற்போது தந்தையையும் பறிகொடுத்துவிட்டு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 4 மாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து பெற்றோரைப் பறிகொடுத்த சிறுமியின் நிலைகண்டு அகூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.