தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி பாராட்டு

செய்திப்பிரிவு

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக அரசின் அமைச்சரவைக் கூட்டம் 5-7-2016 அன்று நடைபெற்றது. அதில், கல்கத்தா உயர் நீதிமன்றத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் என்றும், பம்பாய் உயர் நீதி மன்றத்தை மும்பை உயர் நீதிமன்றம் என்றும், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் என்றும் பெயர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் உச்ச நீதிமன்றமாக, சென்னை உயர் நீதிமன்றம் தான் விளங்கியதாம். இந்தியாவில் உயர் நீதிமன்றங்களை அமைக்க இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய மூன்று இடங்களில் உயர் நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டதாம்.

அதன்படி 1862ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி சென்னையில் உயர் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை விக்டோரியா மகாராணி பிறப்பித்திருக்கிறார். அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 15ந்தேதி மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

ஆவணங்களின் அடிப்படையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்பட்டு வரும் இந்த நீதிமன்றத்தின் பெயரை சென்னை உயர் நீதிமன்றம் என்றும், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும் மாற்றக் கோரி, கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்கள், குறிப்பாகத் தமிழக வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து, போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

அவர்களின் நீண்ட காலக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாக, மத்திய அமைச்சரவை தற்போது சென்னை உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்க செயலாகும்.

1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் உருவானவுடன், மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றியதையும், அதைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு எனது தலைமையில் திமுக ஆட்சி நான்காம் முறையாக அமைந்த போது, மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தின் தலைநகரை சென்னை என்று மாற்றியமைத்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

மத்திய பாஜக அரசு, நாட்டு மக்கள் நலனுக்குத் தொடர்பில்லாத சில காரியங்களைச் செய்வதற்கான முயற்சிகளிலே அவ்வப்போது ஈடுபட்ட போதிலும், இது போன்ற நல்ல காரியங்களைச் செய்கின்ற நேரத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளதை, திமுக சார்பில் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

இந்த நல்ல நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்கு மொழியாக அமைய வேண்டுமென்ற தமிழ் மக்களின் கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு, திமுக ஆட்சிக் காலத்தில் அதற்கான முன்மொழிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிலுவையிலே இருந்து வருகிறது.

மத்திய பாஜக அரசு, அந்தக் கோரிக்கையையும் விரைவில் ஏற்று, தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகோளை நினைவுபடுத்துகிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT