தமிழகம்

கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

குறைக்கப்பட்ட கூலியை மீண்டும் உயர்த்தித் தருமாறு உற்பத்தியாளர்களை வலியுறுத்தி பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விசைத் தறி நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்துக்குட்பட்ட அத்திமாஞ்சேரிப்பேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, காளிகாபுரம், வங்கனூர், பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறிகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

உற்பத்தியாளர்களிடமிருந்து பாவு நூல் பெற்று லுங்கி தயார் செய்து வரும் இந்த நெசவாளர்களுக்கு, கடந்த ஓராண்டாக படிப்படியாக கூலி குறைக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. விசைத்தறி உதிரி பாகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் குறைக்கப்பட்ட கூலியை மீண்டும் உயர்த்தித் தர வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அத்திமாஞ்சேரிப்பேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, காளிகாபுரம், வங்கனூர் பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் தலைமையில் நெசவாளர்கள்-உற்பத்தியாளர்கள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆர்.கே.பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டை, அண்ணாநகர் பகுதியில் நெசவாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், வீடு வீடாக அரிசி சேகரித்து கஞ்சி காய்ச்சி, கஞ்சித் தொட்டி திறந்து அனைவருக்கும் வழங்கினர்.

SCROLL FOR NEXT