தமிழகம்

திருவள்ளூர், காஞ்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்காக நேற்று நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 31,83,431 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1,135 பள்ளிகளில் நேற்று நடந்தது.

காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணிவரை நடந்த இந்த சிறப்பு முகாமில், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, உரிய படிவங்களை பூர்த்தி செய்து, அதிகாரிகளிடம் அளித்தனர். திருவள்ளூர்- பெரியகுப்பம் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி பார்வையிட்டார். இதேபோன்று வரும் 25-ம் தேதியும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5,742 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க மனு அளித்தனர். அதேபோல் இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல், பெயர்கள், புகைப்படங்களில் மாற்றம் இருந்தால் திருத்தும் பணிகளுக்கும் வாக்காளர்கள் பலர் மனு அளித்தனர்.

பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6, நீக்கலுக்கு படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8ஏ ஆகிய படிவங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி இம்மாதம் 30-ம் தேதி வரை நடக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் 132 மையங்களில் 332 வாக்குச் சாவடி நிலை முகவர்கள் மூலம் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இருங்காட்டு கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை பெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி பார்வையிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT