கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தம் நடந்தது. இதற்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்:
தமிழகத்தில் உள்ள 1,161 கைத் தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங் களின் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், 2016 ஏப்ரல் 1-ம் தேதி முதல் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படைக் கூலியில் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான திருத்திய ஊதிய விகிதங்களை பரிந்துரைக்க ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கையின் அடிப்படையில், 2016-17 ஆண்டில் நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான ஊதிய விகிதங்கள் திருத்தியமைக்கப்படும். கைத்தறித் துணிகளின் விற்பனையை மேம்படுத்த, ரூ.25 லட்சத்தில் பரமக்குடியில் ஜவுளி வடிவமைப்பகம் அமைக்கப்படும். நெசவாளர்கள் உடல் நலத்தை பாதுகாக்க, மேம்படுத்த சிறப்பு நல்வாழ்வு முகாம்கள் நடத்தப்படும். மதுரை மற்றும் நெல்லையில் ரூ.8 கோடியில் கூட்டுறவு சங்க உற்பத்தி துணி வகைகள் விற்பனைக்கான வளாகங்கள் அமைக்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கவும், நவீன தொழில்நுட்பத்தை பயன் படுத்தி உற்பத்தியை மேம்படுத்தவும், உயர் ரக தறிகள், உபகரணங்கள் ரூ.4.23 கோடியில் வழங்கப்படும் என்றார்.