தமிழகத்தில் நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வழங்கப்படுமா என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசை எதிர்நோக்கியுள்ளனர்.
டீசல் விலை ஏற்றம் காரணமாக வயலை உழவு செய்யும் டிராக்டர், நடவு செய்யும் மற்றும் அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கான வாடகைகள் அவ்வப்போது உயர்த்தப்படுகின்றன. மேலும், இடுபொருள்களான விதை நெல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரும் செங்கல் சூளை, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், கட்டிடக் கட்டுமானப் பணிகள் என மாற்றுத் தொழில்களுக்குச் சென்று விட்டனர். இதனால் இந்த மாவட்டங்களில் வேளாண் பணிகளை மேற்கொள்ள அதிகளவில் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் கூடுதல் கூலி கொடுத்து ஆள்களை தேடிப் பிடிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மாற்றுப் பயிர்கள் பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் விவசாயிகள் முழுமையாக நெல் சாகுபடியை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிகழாண்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையோடு தமிழக அரசின் மானியம் முறையே ரூ.70, ரூ.50 சேர்த்து சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.1,415 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.1,360 என விலை அளித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுமென அறிவித்து, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு திறந்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியது:
கடந்த ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டு சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் காய்ந்து, கருகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால், சம்பா சாகுபடியை முழு நம்பிக்கையுடன் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், நெல்லுக்கான விலை போதுமானதாக இல்லை என்பது விவசாயிகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.20,000 செலவாகிறது. இதிலிருந்து எவ்வித இயற்கை சீற்றங்களிலும் பயிர்கள் பாதிக்கப்படாத பட்சத்தில் சராசரியாக 1.5 டன் மகசூல் கிடைக்கும்.
பல நேரங்களில் பல்வேறு காரணங்களால் விவசாயிகள் செய்த செலவுக்குக்கூட மகசூல் கிடைப்பதில்லை. இதனால், சாகுபடிக்காக வாங்கிய கடனையும் கட்ட முடிவதில்லை.
தேசிய வேளாண் ஆணையம், அனைத்து வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கும் உற்பத்திச் செலவுடன் 50 சதவீத கூடுதல் தொகையைச் சேர்த்து கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டுமென 2006-ம் ஆண்டில் பரிந்துரை செய்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை இதுவரையில் மத்திய அரசு ஏற்று விலையை வழங்கவில்லை.
இந்த பிரச்சினைக்குக் காரணம் உற்பத்தியை மையமாக வைத்து வேளாண் கொள்கை உருவாக்கப்படுகிறது. விவசாயிகளை மையமாக வைத்து உருவாக்கப்படவில்லை என்பதுதான். கட்டுப்படியான விலையை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதுவரையில், மத்திய அரசு வழங்கும் விலையுடன் சேர்த்து தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ.2,000 கொள்முதல் விலையை அரசு வழங்க வேண்டும்” என்றார்.
நெல் விலை உயர்ந்தால் அரிசி விலை உயருமா?
நெல் விலையை கூடுதலாக அளித்தால் அரிசி விலை உயர்ந்துவிடும் என அரசியல்வாதிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது உண்மையில்லை. ஒன்றரை கிலோ நெல்லிலிருந்து ஒரு கிலோ அரிசி கிடைக்கும். தற்போது அரசு கொள்முதல் செய்யும் விலைப்படி பார்த்தால் ஒன்றரை கிலோ நெல் ரூ.21. இந்தவகையில் பார்த்தால் ஒரு கிலோ அரிசி அதிகபட்சமாக ரூ.28 வரைதான் விற்க வேண்டும். ஆனால், ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை, அரிசியை வாங்கும் நுகர்வோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இருவரையும் ஏமாற்றி, இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் பெறுகின்றனர் என்பதுதான் உண்மை நிலவரம் என்கின்றனர் விவசாயிகள்.