போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வயிற்றில் குண்டு பாய்ந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயிலை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக் காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வந்தனர்.
திங்கள்கிழமை காலை 10 மணியளவில் அழைத்து வரப்பட்ட பன்னா இஸ்மாயிலுடன் 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்தனர். டவர் 2 கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள 213-வது வார்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு பகல் 12.15 மணிக்கு அவரை அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்து பகல் 1.30 மணிக்கு வெளியே வந்த பன்னா இஸ்மாயிலை போலீஸார் வேனில் ஏற்றி மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், ‘‘பன்னா இஸ்மாயிலின் வயிற்றில் குண்டு துளைத்ததால் கணையம் பாதிக்கப்பட்டது. அதை அகற்றி விட்டு, மலம் கழிக்க டியூப் வைக்கப்பட்டது. அந்த டியூபை எடுத்துவிட்டு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவதற்காக அவரை போலீஸார் அழைத்து வந்தனர். இந்த சிகிச்சை செய்வதற்கு தனியார் டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும். ஆனால், போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தகவல் சொல்லிவிட்டு, திங்கள்கிழமை காலையே அவரை அழைத்து வந்துவிட்டனர். அவருடைய கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை பரிசோதனை செய்து பார்த்தோம். எல்லாம் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது உடலில் எந்த பாதிப்பும் இல்லை. சிறையில் உள்ள டாக்டர்களை கலந்தாலோசித்து விட்டு, அறுவை சிகிச்சை தேவை என்றால், ஒரு வாரம் முன்பாகவே தகவல் தெரிவித்துவிட்டு வரும்படி சொல்லி அனுப்பியுள்ளோம்’’ என்றனர்.