தமிழகம்

ஆவடியில் கட்டி முடித்து 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத காய்கனி வளாகம்: 4-வது முறையாக டெண்டர் விடப்பட்டது

ப.முரளிதரன்

ஆவடியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காய்கனி வளாகம் இன்னும் திறக்கப்படாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு சிறு, குறு வியாபாரிகள் மற்றும் தறகாலிக வியாபாரிகள் என சுமார் 200 பேர் கடை வைத்துள்ளனர். சரியான கட்டமைப்பு இல்லாததால் வெயில், மழைக் காலங்களில் வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் நிரந்தரமான ஒரு வணிக வளாகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆவடி முன்னாள் எம்எல்ஏ அப்துல் ரஹீம் கடந்த 2011-12-ம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கினார். நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் மொத் தம் 68 கடைகள் கட்டி முடிக்கப்பட்டன.

இதை 2013 அக்டோபர் 18-ம் தேதி அப்துல் ரஹீம் திறந்து வைத்தார். ஆனால், திறந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வியாபாரிகள் சாலையின் இருபுறங்களிலும் கடை போடுவதால் ஆவடி-பூந்தமல்லியை இணைக்கும் புதிய ராணுவ சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த காய்கனி வளாகத்தை திறப்பதற்காக தற்போது 4-வது முறையாக டெண்டர் விடும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இதுகுறித்து, ஆவடி பெருநகராட்சி ஆணையர் மதிவாணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த காய்கனி வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் ஆயிரத்து 500 ரூபாய் என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 261 விண்ணப்பதாரர்கள் டெண்டரில் பங்கேற்று உள்ளனர்.

ஒவ்வொரு முறையும் டெண்டர் விடும்போது ஏதாவது ஒரு பிரச்சினையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று வந்தனர். இந்த முறை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்தைக் கேட்டு வாடகை, வைப்புத் தொகை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை எவ்வித பிரச்சினையும் இன்றி ஏலம் நடத்தி முடிக்கப்பட்டால் 15 நாட்களுக்குள் அங்காடி திறக்கப்பட்டு கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.37 லட்சம் இழப்பு

இந்த வணிக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 68 கடைகள் 9-க்கு 9 அடி என்ற அளவு கொண்டது. கடை வாடகை மூலம் ஒரு ஆண்டு வருவாய் மட்டும் ரூ.12 லட்சத்து 24 ஆயிரம். இதன்படி கடந்த 3 ஆண்டுகளாக வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வராததால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 36 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT