தமிழகம்

தி இந்து செய்தி எதிரொலி: மீஞ்சூர் அருகே மேலூரில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி கட்டும் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ செய்தி எதிரொலியாக, மீஞ்சூர் அருகே மேலூரில் புதிதாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிக் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் கொண்ட இக்கிராமத்தில் 1959-ம் ஆண்டு அரிஜன தொடக் கப்பள்ளியை முன்னாள் முதல்வர் எம்.பக்தவசலம் திறந்து வைத்தார்.

சுமார் 10 ஆயிரம் சதுரடி பரப் பளவில் ஓட்டுக் கட்டிடத்தில் அமைந்த இந்தப் பள்ளி, மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தை கள் கல்வி கற்க உறுதுணையாக விளங்குகிறது.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வந்த இந்த பள்ளியின் கட்டிடம் 57 ஆண்டுகளை தாண்டிய நிலையில் மேற்கூரைகள் சேதமடைந்தும், சுவர்களில் விரிசல் விழுந்து இடிந்து விழுகிற நிலையில் இருந்தது.

இதுகுறித்து, கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது. அந்த செய்தியின் எதிரொலியாக, அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பள்ளி இயங்கத் தொடங்கியது. தொடர்ந்து, புதிய பள்ளி கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டு, ரூ.56 லட்சம் மதிப்பில் 5 வகுப்பறைகளும், ஒரு தலைமை ஆசிரியர் அறையும் அடங்கிய, 2 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் அமைக்க கடந்த 6-ம் தேதி பூமி பூஜை நடந்தது.

‘தாட்கோ’ மூலம் தொடங்கப் பட்டுள்ள இந்தப் பணி வரும் மே மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும், புதிய பள்ளிக் கட்டிடம் ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆதிதிராவிடர் நலத் துறை தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT