தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு அக்டோபர் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித் துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவுத் துறை உயர் அலுவ லர்களுடனான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர், கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்படும் 32 ஆயிரம் ரேஷன் கடைகளும் அக்டோபர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும். அன்றைய தினம் பணியாளர்கள் விடுப்பில் செல்லக் கூடாது என்று அமைச்சர் அறிவுறுத்தினார். அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்குவதை கண்காணிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கவும் அமைச்சர் உத்தரவிட்டார். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 044 - 28364860.
25 அம்மா மருந்தகங்களை திறப்பது, கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத் துதல், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தரமான வெடிபொருட்களை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெறுதல், ரேஷன் கடை பணியாளர்களை தொகுப்பு ஊதியத்திலிருந்து காலமுறை ஊதியமாக மாற்றுதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.