தமிழகம்

தலைவர் பதவி ராஜினாமா: காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்த முடியவில்லை - ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய இளங்கோவன்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்த இயலவில்லை என்ப தால் ராஜினாமா செய்துள்ளேன் என்று தனது ஆதரவாளர்களை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமாதானப்படுத்தினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 8 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங் கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதர வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இளங்கோவன் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, 40 மாவட்டத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் சென்னை மணப் பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் இல்லத்தின் முன்பு குவிந்தனர்.

தீக்குளிப்பு முயற்சி

தனது ஆதரவு மாவட்டத் தலைவர்களுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். ஆலோ சனைக் கூட்டம் நடந்து கொண்டி ருந்த போது, சென்னை போரூரைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தீக்குளிக்க முயற்சித்தார். அவரை சக தொண்டர்கள் தடுத்தனர். அவரைப் போலவே, மேலும் 2 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

என்னால் முடியவில்லை

ஆலோசனைக் கூட்டத்தின் போது, “நீங்கள் ராஜினாமா செய்கிற பட்சத்தில், நாங்களும் ராஜினாமா செய்வோம்” என்று இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் அவரிடம் நேரடியாகவே கூறினர். அப்போது மாவட்டத் தலைவர்களிடம் பேசிய இளங்கோவன், “காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்த வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதனை என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து கட்சி நடத்தவே விரும்பினேன்.

ஆனால், கடந்த சட்டப்பேர வைத் தேர்தலின்போது, எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டு மென்று சிலர் சரியாக உழைக்க வில்லை. இதற்கு மேலும் தலை வராக தொடர விரும்பவில்லை. எனவே, எனது ராஜினாமா கடிதத் தை தலைமையிடம் அளித்து விட்டேன். நீங்கள் யாரும் ராஜினா மா செய்ய வேண்டாம். சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் உறுதுணையாக இருந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

டெல்லி பயணம்

எனினும், இளங்கோவனின் பேச்சில் அவரது ஆதரவு மாவட்டத் தலைவர்கள் சமாதானம் அடையவில்லை. தமிழக காங் கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையே தொடரச் செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக உள்ள மாவட்டத் தலைவர்கள் வரும் 29-ம் தேதி டெல்லி சென்று சோனியா காந்தியிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

ஆதரவாளர்கள்

இதுபற்றி மத்திய சென்னை மாவட்டத் தலைவரும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளருமான ரங்கபாஷ்யம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு போன பிறகு, கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர் இளங்கோவன். தேர்தலுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் தவிர மற்ற தலைவர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. காங்கிரஸ் கட்சியில் இதுவரை இருந்த சம்பிரதாயங்களை உடைத்து, 17 மாவட்டத் தலைவர்களுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாய்ப்பளித்தார். இதில் ஆத்திரம் அடைந்த பிற தலைவர்கள் அவருக்கு எதிராக செயல்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு இளங்கோவனின் தலைமைதான் அவசியம். இதனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நாங்கள் டெல்லி சென்று வலியுறுத்தவுள்ளோம்” என்றார்.

இதற்கிடையே ப.சிதம்பரத்தை மாநிலத் தலைவராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதே போல், கிருஷ்ணசாமி, தங்கபாலு, வசந்தகுமார் போன்றவர்களும் தலைவர் பதவியை குறிவைத் துள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பலத்த போட்டி நிலவுகிறது.

ராஜினாமாவை ஏற்றார் சோனியா காந்தி

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்ததை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுள்ளார். இதன் பேரில் ஓரிரு நாளில் புதிய தலைவர் அறிவிக்கப்படவுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் போட்டியிட்ட 41 தொகுதிகளில் 90 சதவீதம் வேட்பாளர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பரிந்துரைப்படி தான் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், கட்சித் தலைமை இளங்கோவன் மீது அதிருப்தியடைந்தது. தமிழக காங்கிரஸ் முன்னாள் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத், உட்பட சில வேட்பாளர்கள் தங்களின் தோல்விக்கு இளங்கோவனின் நடவடிக்கை தான் காரணம் என்றனர். இந்த சூழலில், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் சில நாட்களுக்கு முன்பு அளித்திருந்தார். இந்த சூழலில், இளங்கோவனின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று ஏற்றுக்கொண்டார்.

அடுத்த தலைவர் யார்?

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார். தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, வசந்தகுமார் உள்ளிட்டோரில் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை பரிசீலனை செய்து வருகிறது.

SCROLL FOR NEXT