மறைந்த பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 86.
வேளச்சேரி சாஸ்திரி தெரு, பாபாஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அசோகமித்திரன் உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர்கள் ஞாநி, சல்மா, இந்திரா பார்த்தசாரதி, அ.மார்க்ஸ், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அசோகமித்திரன் மறைவுக்கு தலைவர்கள், இலக்கி யவாதிகள், எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்: அசோகமித்திரன் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மன வருத்தமும், துயரமும் அடைந் தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சு.திருநாவுக்கரசர்: தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரனின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத் துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இரா.முத்தரசன்: கலையும், இலக்கியமும் வெறும் பொழுதுபோக்குக்கானவை அல்ல, அவை சமூக நலனுக்கானவை என்பதை அசோகமித்திரனின் எழுத்துகள் உணர்த்துகின்றன. அவரது மறைவு தமிழ் எழுத்துலகுக் கும், இந்திய இலக்கியத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
எம்.எச்.ஜவாஹிருல்லா: எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு இயங்கிய அசோகமித்திரனின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் சொத்துகள். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள், வாசகர் களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறோம்.