ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலம் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடந்தது.
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை ஆலோசகர் இ.ஸ்ரீதரன் கலந்துகொண்டு பாம்பன் ரயில்வே பாலம் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்தார்.
‘நூற்றாண்டு பாம்பன் பாலம்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் வெளியிட முதல்பிரதியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா பெற்றுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் ராகேஷ் மிஸ்ரா கூறியதாவது:
ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலம் 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி திறக்கப்பட்டது. இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது. பாம்பன் ரயில்வே பாலம் நூற்றாண்டு கொண்டாட்டம் ஒரு மாதம் நடந்தது. இந்த கொண்டாட்டத்தை பாம்பனில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கிவைத்தார்.
பாம்பன் ரயில்வே பாலத்தின் பெருமையைக் குறிக்கும் வகையில் தபால்தலை வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
பாம்பன், மதுரையில் பாம்பன் ரயில்வே பாலம் குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று நடத்தப்படுகிறது. இதில், பாம்பன் ரயில்வே பாலத்தின் வரலாறு மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், 1964-ம் ஆண்டு புயல் தாக்கியதால் பாலம் சேதமடைந்தது, பின்னர் சீரமைக்கப்பட்டது, அகல ரயில் பாதையாக்கும்போது சந்தித்த சவால்கள் ஆகியவற்றை விளக்கும் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு ராகேஷ் மிஸ்ரா கூறினார்.
தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில் முதன்மை ஆலோசகர் இ.ஸ்ரீதரன் கூறும்போது, ‘‘1964-ம் ஆண்டு வீசிய பலத்த புயலில் பாம்பன் ரயில்வே பாலம் பெரும் சேதமடைந்தது. திறன்மிக்க பொறியாளர்கள், தொழிலாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர்.
சிறு விபத்து, உயிரிழப்பு இல்லாமல் 46 நாட்களில் பாம்பன் பாலத்தை சீரமைக்க முடிந்தது’’ என்றார்.
சென்னை நகருக்கு பொருத்தமானது மோனோ ரயிலா, மெட்ரோ ரயிலா என்று நிருபர் கேட்டதற்கு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து நன்றாக இருக்கும் என்றார்.
தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டி.லட்சுமணன், மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி எம்.பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.