தமிழகம்

பண பேர விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க குதிரை பேரம் நடத்தப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர் கே.பழனிசாமி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஜூலை 11-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெறுவதற் காக அதிமுக எம்எல்ஏக் களுக்கும், அதிமுக ஆதரவு எம்எல்ஏ.க்களுக்கும் கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் கூறியதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. ‘‘அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அந்தக் குரல் என்னுடையதல்ல’’ என்று எம்எல்ஏ சரவணன் மறுப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில், ‘ஏற்கெனவே தொடர்ந்த வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில் தற்போது அதிமுக எம்எல்ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ ஒருவரே தெரிவித்துள்ளதாக ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக சிபிஐ மற்றும் வருவாய் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், இடையீட்டு மனு மீது உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

முதல்வர் கே.பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ‘‘மனுதாரர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொடர்ந்துள்ள பிரதான வழக்கின் கோரிக்கையும், தற்போது தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு மீதான கோரிக்கையும் மாறுபட்டதாக உள்ளது. எனவே, இந்த இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும்23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT