கமுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 10 ஏக்கர் பரப்பளவில் வாழைகள், 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
கமுதி அருகே கூலிபட்டி, ராமசாமிபட்டி, கோரப்பள்ளம், கீழமுடிமன்னார்கோட்டை, காவடிபட்டி, நீராவி, கரிசல்குளம், மேலமுடிமன்னார்கோட்டை, தோப்பு நத்தம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்துக் கும் மேலாக மழை நீடித்தது.
சூறைக் காற்று, மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கோரப்பள்ளம், கிழாமரம், இரட்டைபுளி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து வயல்வெளிகளில் விழுந் தன. மழையால் விவசாயி கள் வீடுகளுக்குச் சென்றதால் உயிரி ழப்பு தவிர்க்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதேபோல் கூலிபட்டி, ராமர் என்பவருக்குச் சொந்தமான 5 ஏக்கரில் நடவு செய்துள்ள வாழை மரங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சாய்ந்தன. மேலும் கொய்யா மரங்களும் சேதமடைந்தன. கோரப்பள்ளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவரின் 1 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்களும் சேதமடைந்தன.
இக்கிராமங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 ஏக்கரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் மழையால் சாய்ந்தன. மேலும் கொய்யா, மல்லிகை, கனகா மரம், தென்னை, கத்திரி, வெண்டை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன.
இது குறித்து விவசாயி ராமர் கூறும்போது, வட்டிக்கு கடன் வாங்கி வாழை நடவு செய்தேன். 5 ஏக்கரில் நடவு செய்த அனைத்து வாழை மரங்களும், மழை மற்றும் சூறைக் காற்றால் முற்றிலும் அழிந்தன. இதனால் எனக்கு ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.