மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத் தின் தலைவர் ஓய்வு பெற்று ஓராண் டுக்கு மேலாகியும், உறுப்பினர்களின் பணிக்காலம் முடிந்து 7 மாதங்களாகி யும் இதுவரை புதிதாக யாரும் நியமிக் கப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக் கான வழக்குகள் தேக்கமடைந்துள்ள தோடு, உரிய நிவாரணம் கிடைக்காமல் நுகர்வோர் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மீத முள்ள 30 மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல் பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரை யிலும் இயங்கி வருகின்றன. காலாவதி யான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங் களின் சேவை குறைபாட்டால் பாதிக் கப்பட்டோர், நுகர்வோர் நீதிமன்றங் களில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு மற்றும் நிவாரணம் பெறலாம். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான இந்த நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனு செய்து நிவாரணம் பெற வழிவகை உள்ளது.
இதில், நிவாரணம் கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். நிவாரணத் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள் மாநில நுகர்வோர் ஆணை யத்தால் விசாரிக்கப்படும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாள்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும்.
மாநில நுகர்வோர் ஆணைய மானது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை தலைவராகவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் இருவரை நீதித்துறை உறுப்பினர்களாகவும், ஒரு ஆண், பெண் உறுப்பினர்களைக் கொண்டும் செயல்பட வேண்டும். ஆனால், மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவராக இருந்த ரகுபதி கடந்த ஆண்டு மே மாத இறுதியில் ஓய்வு பெற்றார். அதன் பின், மாநில நுகர்வோர் ஆணைய உறுப் பினர்களாக பதவி வகித்த அண்ணா மலை, ஜெயராமன் ஆகியோர் வழக்கு களை விசாரித்து வந்தனர். இவர்களின் பணிக்காலமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
தற்போது, மாநில நுகர்வோர் ஆணை யத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இத னால், சுமார் 3,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து, நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.பிறவி பெருமாள் கூறியதாவது:
பல மாதங்களாக மாநில நுகர் வோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் நீதித்துறை உறுப்பினர்கள் இல்லாததால் வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேக்கமடைந்து உள்ளன. இதனால், நிவாரணம் கிடைக்காமல் நுகர்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். தலைவர் பணியிடத்தை நிரப்பக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், பணியிடத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவுக்குப் பிறகும், பணியிடம் நிரப்பப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதேபோன்று, ஒவ்வொரு முறையும் மாவட்ட, மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் காலியாகும் போதும், பொது நல வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே பணியிடங்களை நிரப்பும் அவல நிலை நீடித்து வருகிறது. எனவே, நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.