தமிழகம்

தமிழகத்தில் 200 புதிய பேருந்துகள் இயக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் 118 பேருந்துகள் உட்பட பல்வேறு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் 200 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் மகளிர் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் மகளிர் நலன் கருதி, பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் 3 மகளிர் சிறப்பு பேருந்துகள் புதிதாக இயக்கப்படுகின்றன.

இப்பேருந்துகள் உட்பட சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 118 பேருந்துகள் புதிய பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம்- 11, சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 4, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம்- 2. மதுரை அரசு போக்குவரத்துக் கழகம்- 12, நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம்- 37 என மொத்தம் ரூ. 45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான 200 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், பூந்தமல்லி, செங்கல்பட்டு, திண்டிவனம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல் (வடக்கு), பொள்ளாச்சி, ஊட்டி, கரூர், புதுக்கோட்டை, மதுரை (வடக்கு), திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சிறப்பு செயலாக்கப்பிரிவுகளுக்கு ரூ.90 லட்சத்தில் 15 ஜீப்புகள் வாங்கப்பட்டுள்ளன.

இவை தவிர, சென்னை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி, பண்ருட்டி, செஞ்சி, ஆம்பூர், இலுப்பூர், திருத்துறைப்பூண்டி, லால்குடி, அரவக்குறிச்சி, வால்பாறை ஆகிய பகுதி அலுவலகங்களுக்கு ரூ.56 லடசத்து 83 ஆயிரம் மதிப்பில் 10 ஜீப்புகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த 25 ஜீப்புகளையும் போக்குவரத்துத்துறை பயன்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT