கத்தார் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழக மீனவரின் உடல் நேற்று திருச்சி வந்தது. அவரது உடலுக்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப் பாலைக்குடி காந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(37), சமயமுத்து, தாமோதரன் பட்டினத்தைச் சேர்ந்த ராஜூ, ஐயப்பன் ஆகிய 4 பேர் ஒரு வருடத்துக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்க பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றனர்.
கடந்த செப்டம்பர் 21-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற இவர்கள் 4 பேரும் கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. கத்தார் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குண்டுகள் பாய்ந்து கார்த்திகேயன் உயிரிழந்தார். மற்ற 3 மீனவர்களையும் கத்தார் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியான மீனவர் கார்த்திகேயனின் உடலை அரசு செலவில் சொந்த ஊர் கொண்டுவருவதுடன், அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் கத்தார் கடற்படை சிறைபிடித்த 3 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பலியான கார்த்திகேயன் உடல் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. அவரது உடலுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், செயலர் விஜயகுமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உடலை அவரது தந்தை தங்கராசு பெற்றுக்கொண்டார். ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திகேயன் உடல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.