தமிழகம்

வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான நிவாரணத் தொகை 50 சதவீதம் உயர்வு

குள.சண்முகசுந்தரம்

வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் தலித் மற்றும் பழங்குடியினருக்கான நிவாரணத் தொகையை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது.

தீண்டாமை மற்றும் வன் கொடுமையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு கொடுப்பதற்காக 1989-ல், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 6 ஆண்டுகள் கழித்துதான் அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

1995-ல் உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தின் விதிமுறைகளின்படி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 22 வகையான வன்கொடுமைகள் பட்டியலிடப்பட்டதுடன் அவற்றுக் கான நிவாரணங்களும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இந்த நிவாரணத் தொகையானது தற்போது இரண்டாவது முறையாக, ஐம்பது சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதியைச் சொல்லி இழி வாகப் பேசுதல் போன்ற வன்கொடுமைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை இப்போது 90 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தலித் மற்றும் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டால் அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த 5 லட்சம் நிவாரணத் தொகை இப்போது ஏழரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, படுகொலை செய்யப்படுவோரின் குடும்பத்தினருக் கும், பாலியல் வன்புணர்ச்சி மற்றும் நிரந்தர ஊனம் போன்ற

கடுமையான வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர் களுக்கும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் அல்லது அரசு வேலை, அல்லது வேளாண் நிலம் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையும் இப்போது 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற வன் கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்விச் செலவு அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

மானபங்கப்படுத்தும் நோக்கத் தோடு தாக்குவது அல்லது பாலியல் வன்புணர்ச்சிக்கு முயற்சி செய்வது உள்ளிட்ட செயல்களால் பாதிக்கப்படும் பட்டியல் சாதி பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 1,20,000 ரூபாய் நிவாரணத் தொகை தற்போது 1,90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நீராதாரங்களை கெடுப்பது, மாசுபடுத்துவது, நடைபாதை உரிமையை பறிப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதிக் கப்படும் அபராதத் தொகையும் இரண்டு லட்சத்திலிருந்து மூன்றே முக்கால் லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதல்களில் உடல் ஊனம் ஏற்பட்டால் அவர்களுக்கு மூன்றே முக்கால் லட்ச ரூபாய் நஷ்டஈடும் கொடுக்க வேண்டும் என்றும் புதிய சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தம் குறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறியதாவது: ‘‘கடந்த ஜூன் மாதம் இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டும் இதுகுறித்து இன்னமும் போதிய

விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை. தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை சுமார் 1200 தலித் மற்றும் பழங் குடியினத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இவர்களில் முப்பதுக் கும் குறைவான குடும்பத்தினரே அரசின் நிவாரணத்தை பெற்றிருக்கிறார்கள். மிகச் சொற்பமான குற்றவாளிகளே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நிவாரணத் தொகையை உயர்த்தி இருப்பது வரவேற்கக்கூடியது தான் என்றாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமை யான நீதி கிடைத்ததாக உணர முடியும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் வன் கொடுமை திருத்தச் சட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவானது தற்போது பாராளுமன்ற நிலைக் குழுவிடம் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்தச் சட்டத் திருத்தமும் உடனடியாக அமலுக்கு வந்தால் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் தீண்டாமை கொடுமைகளில் இருந்து பெருமளவு காப்பாற்றப் படுவார்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT