தமிழகம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அதலபாதாளத்துக்கு சென்ற நீர்மட்டம்: ுடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கும் தட்டுப்பாடு

செய்திப்பிரிவு

திண்டுக்கல் நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் வறண்டு விடும் நிலையில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நீர்த்தேக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்து நீர் இரை க்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. நீர்த்தேக்கப் பகுதியில் பத்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியும் நடை பெற்றுவருகிறது. மற்றொரு நீர் ஆதாரமான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழக்கமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரில் பாதியளவு கூட விநியோகிக்கப்படாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக நகர் பகுதிகளில் வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் மாநகராட்சி நிர்வாகம், 15 நாட்களுக்கு ஒரு முறை, 20 நாட்களுக்கு ஒரு முறை என கால அளவை நீட்டித்து தற்போது 25 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்கிறது. சில நேரங்களில் குழாய் உடைப்பு காரணமாக மாதம் ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தற்போது நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்றதால் நகரில் பல பகுதிகளில் வீடுகளில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளில் தண்ணீர் இல்லை. லட்சுமிசுந்தரம் காலனி, கோபால் நகர், அரசன் நகர் பகுதி வீடுகளில் 600 முதல் 700 அடி வரை துளையிடப்பட்ட போர்வெல்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆறாயிரம் லிட்டர் கொண்ட டேங்கர் ரூ. 750-க்கு விலைக்கு வாங்கி வீடுகளில் உள்ள தொட்டிகளில் சேமித்து வருகின்றனர்.

நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் சிக்கனமாகப் பயன்படுத்தினால் ஒரு வார த்துக்கு மட்டுமே இந்த தண்ணீரை பயன்படுத்தமுடியும். இதனால் குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வரை செலவாகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடம் ரூ. 12-க்கு வாங்குகின்றனர். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் பெய்யும் மழை, கீழ்மலைப் பகுதிகளில் பெய் யவில்லை. இதனால் ஆத்தூர் நீர்த்தேக்கத்துக்கு முற்றிலும் தண்ணீர் வரத்து இல்லை. நகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு ரூ. 1.50 கோடி ஒதுக்கி உள்ளது. இதைக் கொண்டு ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. நகரிலும் தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. தனியார் கிணறுகளில் நீர் எடுத்து லாரிகள் மூலம் விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை விரைவில் தொடங்கினால்தான் திண்டுக்கல் நகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

SCROLL FOR NEXT