அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேர், கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டத்தில் சுமார் 1,400 ரேஷன் கடைகள் செயல்படுவதும், பெரும்பாலான கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் முறையாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக 7 பேர் கொண்ட குடும்பத்தில் 4 பேருக்கு ஆதார் அட்டை இருந்தால், அவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும், மாவட்டத்தில் 70 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 30 சதவீதம் பேருக்கு உடனடியாக பொருட்களை நிறுத்திவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க செயலாளர் அ.ராதிகா கூறியதாவது: ரேஷன் கடைகளில் மாதம் 15 கிலோ அரிசிக்குப் பதிலாக 10 கிலோ மட்டுமே கொடுக்கின்றனர். அதற்குப் பதிலாக 2 கிலோ கோதுமை வழங்குகின்றனர். மேலும், அரிசியை ஒரே தவணையில் வழங்காமல், பலமுறை கடைக்கு வரவைத்து அலைக்கழிக்கின்றனர். அப்படியும் முழு அளவு பொருட்களை வழங்குவதில்லை. ஒரு சிலிண்டர் வைத்துள்ளவர்களுக்கு 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். அதையும் முறையாக வழங்குவதில்லை.
ரேஷன் கடைகளின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை என்றாலும், மதியம் 1.30 மணிக்குமேல் எந்தக் கடையிலும் பொருட்கள் விநியோகிப்பதில்லை. கடை பணியாளருக்கு ரூ.5,500 முதல் ரூ.9 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அவர், தனது சொந்த செலவில் உதவியாளரை பணியில் அமர்த்திக்கொண்டு, ரூ.5 ஆயிரம் வரை சம்பளம் வழங்குகிறார். வெளிச் சந்தைகளில் முறைகேடாக பொருட்களை விற்பதன் மூலமாக கிடைக்கும் தொகையைக் கொண்டு, இந்த செலவை சரிசெய்துகொள்கிறார்.
சில கடைகளில் 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கூட்டுறவு சங்கத்தில் பணம் இல்லை என்று கூறி, சம்பளம் தருவதில்லையாம்.
சுயஉதவிக் குழுவின் கீழ் செயல்படும் ஒரு கடையில் பணியாற்றும் 12 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்குவதில்லை. வெளிச் சந்தையில் பொருட்களை விற்பதன் மூலமாக, சாக்குப் பை விற்பனை மூலமாக சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக பொருட்கள் வாங்காதவர்களுக்கும், பொருட்கள் வாங்கியதாக செல்போனில் குறுந்தகவல் வருகிறது. இதுகுறித்து கேட்டால் தகவல் பிழை என்கிறார்கள். போலி கார்டை ஒழிப்பதற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதாக கூறுகின்றனர். ஆனால், போலி கார்டுகள் எவை என்பது கடைக்காரர்களுக்குத் தெரியும். அவர்கள் நினைத்தால் போலி கார்டுகளை ஒழிக்க முடியும்.
நாங்கள் திரட்டிய புள்ளி விவரங்களைத் தொகுத்து உணவுத் துறை அமைச்சரிடம் வழங்க மாநிலத் தலைமை திட்டமிட்டுள்ளது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரேஷன் கடைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
அ.ராதிகா