இந்திய கடற்படை ஏற்பாடு செய்த போர் சாகச நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றதால் அது அரசியல் சாகச நிகழ்ச்சியாக மாறியது.
இந்திய கடற்படையில் புதி தாக சேர்க்கப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பல் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இக்கப்பலில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நடுக்கடலில் அழைத்துச் சென்று போர் ஒத்திகை சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்ட கடற்படை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடற்படை சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. இதுகுறித்து, விசாரித்தபோது முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் அணி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களிடம் கேட்டபோது அவர்களுக்கு இந்நிகழ்ச்சி தொடர்பாக எந்த அழைப்பும் அனுப்பவில்லை என தெரிவித்தனர். ஆனால், இதை ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் மறுத்தனர்.
‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பலின் பெருமையையும், போர் ஒத்திகை சாகச நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக கடற்படை சார்பில் பத்திரிகையாளர்கள் மற் றும் ஊடகத் துறையினர் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் அதைப் பற்றி செய்தி சேகரிக்காமல் அமைச் சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக் களிடம் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்துதான் வளைத்து வளைத்துக் கேள்வி கேட்டனர். இதனால் நிகழ்ச்சியின் நோக்கம் திசை மாறியது.
வருமானவரித் துறை ரெய்டில் சிக்கிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மனைவி, மகளுடன் வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் பேட்டி அளிக்க மறுத்துவிட்டார். அதேபோல், அமைச்சர் ஜெயக்குமாரிடமும் நிருபர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேள்வி கேட்டனர். அவரும் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் அமைச்சர்கள் கப்பலில் சுற்றுலா மேற்கொள்வது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதய குமாரிடம் கேட்டபோது, ‘‘இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பல் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது தவறு கிடையாது’’ என்றார்.
இக்கப்பல் பயணத்தின்போது அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் அவர்கள் மீது செய்தியாளர்கள் வைத்த கண் வாங்காமல் இருந்தனர். ஆனால் கப்பலில் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. ஆக மொத்தத்தில் போர் சாகச நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி எதிர்பார்ப்பு கலந்த அரசியல் சாகச நிகழ்ச்சியாக மாறியது.